Sunday, December 20, 2009

அனுதின மன்னா Dec 21

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டம்

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக்;கோபு 1:14-15)

நாம் அனைவரும் சோதனைகளிலும், இச்சைகளிலும் அடிக்கடி போராடுகிறவர்களாகவே காணப்படுகிறோம். ஒருவரும் சொல்ல முடியாது, எனக்கு இச்சையே இல்லை அல்லது சோதனையே இல்லை என்று. தனக்கு ஏற்படும் சோதனையில் யார் வென்று, முதிர்ச்சி அடைகிறார்களோ, அவர்கள் அந்த சோதனைக்கு தாங்களே காரணம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். யார் அடிக்கடி விழுந்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள்தான் மற்றவர்களையும், சூழ்நிலைகளையும், பிசாசையும் குறைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.


பெர்சிய ராஜ்யத்தின் அரண்மனையில், ஒரு இளம் வாலிபன் சோதனையில் அடிக்கடி விழுபவனாக காணப்பட்டான். அவன் இந்தமாதிரி சோதனைகளிலிருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான். இதை அறிந்த அரசன் அந்த வாலிபனிடம், ஒரு பாத்திரத்தில் நிரம்பி வழியும்படி எண்ணெய் ஊற்றி, அதை அவன் தலையின்மேல் வைத்து, இதில் ஒரு சொட்டு கீழே விழுந்தாலும், உன் தலை சீவப்படும். இதை நகரத்தின் ஒரு முனையிலிந்து மறுமுனைக்கு கொண்டு சென்று வர வேண்டும் என்று கட்டளையிட்டான். அவன் அந்த எண்ணெய் பாத்திரத்தை தலையில் வைத்துக் கொண்டு, மார்க்கெட் பகுதியிலும், சந்தடி நிறைந்த தெருக்களின் வழிகளிலும் சுமந்துச் சென்று, ஒரு துளி எண்ணெய் கீழே விழாமல் பத்திரமாய் அரண்மனைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.


ராஜா அவனை நோக்கி, நீ போன வழியில் இருந்த ஹோட்டலின் முன் நின்ற அழகிய பெண்களை பார்த்தாயா? என்றுக் கேட்டான் அதற்கு அந்த வாலிபன் இல்லை நான் பார்க்கவில்லை’ என்றான். ராஜா திரும்பவும், ‘பக்கத்தில் பணத்தை வைத்து எண்ணிக் கொண்டிருந்தார்களே அதைப் பார்த்தாயா’ என்று கேட்க, அதற்கும் ‘இல்லை’ என்று வாலிபன் பதிலளித்தான். அரசன் மீண்டும் அவனிடம், ‘பக்கத்தில் சிலர் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்களே அதைப்பாத்தாயா’ என்று வினவ, அதற்கு அந்த வாலிபன், “இல்லை அரசே, நான் என் தலையில் உள்ள எண்ணெய் பாத்திரத்தின் மேலேயே என் கவனத்தை வைத்திருந்தேன். ஆதனால் என்னைக் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை என்றான். அதற்கு அரசன், ‘சரிதான் ஏன் என்றால் நீ உன் உயிருக்கு கவலைப்பட்டபடியால் மற்ற எந்தக் காரியமும் உன்னை பாதிக்கவில்லை ஆகவே இதன் மூலம் பாடத்தை கற்றுக் கொள் உன் உயிரின் மேல் கவனமாயிருந்தால் நீ எந்த இச்சைகளிலும் விழமாட்டாய்” என்று அறிவுரை கூறினான். பரம அழைப்பின் பந்தய பொருளின் மேல் நம் கவனம் முழுவதும் இருந்தால் நமக்கு இடையிடையே வரும் சோதனைகளிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் தப்பலாம்.
..

“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரேயர் 12:1)


கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்
.

ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, பாவத்திலும் இச்சைகளிலும் நாங்கள் தொடர்ந்து விழுந்துக்
கொண்டிருக்காமல் அவற்றின் மேல் நாங்கள் ஜெயம் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் வெற்றியோடு ஓடி முடிக்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment