Tuesday, December 22, 2009

அனுதின மன்னா Dec 22



நான் என்னும் சுயம்

ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். - (கலாத்தியர் 6:3)

ஒரு முறை ஒரு சாது, வேறொரு புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றிருந்தார். அந்த இடத்தில் புகழ் பெற்றிருந்த இன்னொரு சாதுவின் சீடர்களிடம், ‘நான் ஒரு பெரிய சாது, என்னை ஒரு விருந்தினராக அடைவதற்கு உங்கள் சாது கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை பார்க்க உங்கள் சாதுவை வரச் சொல்லுங்கள்’ என்று கூறினார். அதற்கு மற்ற சாது, ‘நான் மரித்தவுடன் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்’ என்று பதில் கூறி அனுப்பினார். அவர் தான் மரிப்பதைக் குறித்துக் கூறவில்லை. நான் என்கிற ஆணவம் போன பிறகு தன்னை காண வரச் சொன்னார்.



இன்று அநேகருக்கு 'நான்' என்கிற ஆணவமும் அகந்தையும் இருப்பதால், கர்த்தரை தனிப்பட்ட முறையில் அறிய முடியாமலிருக்கிறார்கள். நான் என்பது சிலுவையில் அறையப்பட்டாலொழிய யாரும் கிறிஸ்துவைக் காண முடியாது. அநேகருக்கு தாங்கள் எந்த நிலையிலிருந்து வந்தார்கள் என்பது மறந்து விடும். தற்போது இருக்கிற நிலைமைதான் கண்முன் தெரியும். அதனால் மற்றவர்களை துச்சமாக எண்ணுவதும், தங்களை பெரியவர்களாக எண்ணிக் கொள்வதும் நடைமுறையில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். சமீபத்தில், மிகச் சிறந்த ஒரு ஊழியர் ஒரு மாநாட்டிற்காக வேறொரு நாட்டிற்கு சென்றிருந்தார். அவருக்கு ஒரு ஓட்டலில் ஒரு அறையை ஒதுக்கியிருந்தார்கள். அவர் அந்த அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, வேறொரு ஊழியர், (அவரும் பெரிய ஊழியரே) , அந்த அறைக்கு வந்தார். இவரிடம், எனக்கு இந்த அறை
ஒதுக்கப்பட்டுள்ளது, நீங்கள் எப்படி வந்தீர்கள்? என்று சத்தம் போட்டாராம். மற்றவர் அமைதியாக, ‘நம் இருவருக்கும் ஒரே அறைதான் ஒதுக்கியுள்ளார்கள்’ என்று கூறவும், அவர், ‘அது எப்படி, நான் என்ன? என் நிலைமை என்ன? நான் எப்படி மற்றவர்களோடு இருப்பது’ என்று போன் பண்ணி வேறு அறை மாற்றி வாங்கிப் போனாராம். (இது ஒரு உண்மை சம்பவம்) எவ்வளவு பெரிய ஊழியக்காரராக இருந்தாலும், நான் என்பது போகவில்லை என்றால், என்ன ஊழியம் செய்தும் பிரயோஜனமில்லை.


ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது - (யாக்கோபு. 4:6).


இயேசுகிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் - (பிலிப்பியர் 2:6-8). . இயேசுகிறிஸ்துவே தம்மை மரணபரியந்தம் தாழ்த்தும் போது நாம் எம்மாத்திரம்? ஆகவே நாம் எந்தக் காரியத்திலும் பெருமைக் கொள்ளாதபடி, நான் என்னும் சுயம் சிலுவையில் அறையப்பட்டதாக, தாழ்மையையே எப்போதும் தரித்துக் கொள்வோம். தேவனுடைய கிருபையை சுதந்தரித்துக் கொள்வோம்.


சுயம் என்னில் சாம்பலாய் மாற

சுத்தாவியே அனல் மூட்டும்

ஜெயம் பெற்று மாமிசம் சாக

தேவா அருள் செய்யுமே




ஜெபம்: எங்கள் அன்பின் நல்ல தகப்பனே, 'நான்' என்கிற அகந்தை எங்களுக்கு எப்போதும் வராதபடி எங்களை காத்துக் கொள்ள கிருபை செய்யும். பெருமையுள்ளவர்களுக்கு நீர் எதிர்த்து நிற்பதால் நாங்கள் எங்களை எந்த நிலையிம் தாழ்த்தி ஜீவிக்கவும், உம்முடைய கிருபைகளை பெற்றுக் கொள்ளவும் கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment