Wednesday, December 23, 2009

அனுதின மன்னா Dec 24

சுவிஷேஷ பாட்டில்கள்

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் - (பிரசங்கி. 11:1)

ஒரு சகோதரன் மிகவும் ஆத்ம பாரம் உடையவராய் எப்படியாவது கர்த்தரின் சுவிசேஷத்தை பரப்ப வேண்டும் என்று அதிக வாஞ்சையுளள்வராய் இருந்தார். அதற்காக தேவனிடம் வழியைக் காட்ட வேண்டும் என்று ஜெபித்து வந்தார். அப்பொழுது கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்தினது சுவிசேஷ பாட்டில்கள்'. அதன்படி, அவர், தூக்கி எறியப்பட்ட பாட்டில்களை சேகரித்து, அதில் அச்சடிக்கப்பட்ட சுவிசேஷ பிரதிகளை வைத்து, தன் வீட்டின் அருகே உள்ள ஒரு ஆற்றில் மிதக்க விடுவார்.


அவர் தொடர்ந்து, 23 வருடங்களாக, 27,000 சுவிசேஷ பாட்டில்களை அந்த ஆற்றில் மிதக்க விட்டார். சரி, இந்த பாட்டில் ஊழியத்தினால் பலன் என்ன என்று கேட்கிறீர்களா? நம்ப மாட்டீர்கள், அந்த சுவிசேஷ பாட்டில்கள் சென்ற இடங்களிலிருந்து, 5600 மக்கள் அதிலிருந்த பிரதிகள் மூலமாக தொடப்பட்டதாகவும், கர்த்தரை ஏற்றுக் கொண்டதாகவும், அவருக்கு பதில் அனுப்பியிருந்தார்கள். மட்டுமல்ல, பதிமூன்றரை வருடங்களுக்குப்பிறகு, அவருக்கு வந்த கடிதத்தில், ஒரு சமுதாயமே இரட்சிக்கப்பட்டதாகவும் அந்த இடத்தில் ஒரு ஆலயமும் ஏற்படுத்தப்பட்டதாக எழுதப்பட்டிருந்ததைக் கண்டபோது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.


நேற்றைய தினத்தில் பார்த்தோம், திரும்ப வரமுடியாத நரகம் என்று. அதிலிருந்து ஆத்துமாக்களை தப்புவிக்க நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அது சுவிசேஷ பாட்டிலாய் இருக்கலாம் அல்லது வேறு எந்த முறையிலாவது இருக்கலாம். ஆத்துமாக்களை இரட்சிக்க தேவனுடைய வார்த்தைகள் இன்னும் வல்லமையுள்ளதாகவே உள்ளது. அதை இரட்சிக்கப்படாத மக்களிடம் சேர்க்க வேண்டியது நமது பொறுப்பு. கர்த்தருடைய தாகத்தை தீர்த்து வைப்போமா?


எனக்காய் பேசிட நாவு வேண்டும்

என்னைப் போல் நடந்திட கால்கள் வேண்டும்

என்னில் அன்பு கூற ஆட்கள் வேண்டும்

அதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்



ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, தடவிப் பார்த்தாவது ஜனம் உம்மைக் கண்டு கொள்ள வேண்டும் என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வாஞ்சையைப் போல எந்த வகையிலாவது ஜனத்தை சந்தியும் அப்பா. அதற்கு எங்களை கருவியாக பயன்படுத்தும். எங்களை எந்த நற்கிரியையும் செய்ய ஆயத்தமுள்ள பாத்திரங்களாக உமக்கே அர்ப்பணிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.





கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment