Sunday, December 27, 2009

அனுதின மன்னா Dec 27

மன்னிப்பு

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள் - (லூக்கா 6:27).


கோரி டென் பூம் என்பவர் தனது தந்தை சகோதரி பெட்ஸியுடன் ஹாலந்தில் வசித்து வந்தார். அந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. ஹிட்லர் ஐரோப்பிய யூதர்களை துன்றுத்த ஆரம்பித்தான். ஆயிரமாயிரமான யூதர்களை நச்சுவாயு கூண்டுக்குள் அடைத்து கொலை செய்தான். பூம் அவர்களின் குடும்பம் அப்படித் தவித்த யூதர்களை தங்கள் வீட்டிற்குள் அடைக்கலம் கொடுத்து, ஆதரித்தனர்.


இதைக் கேள்வியுற்ற ஹிட்லரின் ராணுவம் மூவரையும் கைது செய்து, 'கான்சன்ட்ரஷன் கேம்ப்' என்னும் கேம்பில் வைத்து வாதை செய்தனர். அவர்களது தந்தை சிறிது காலத்தில் மரித்தார். அதற்கு பின்பு இளவயதான கோரியும் அவரது சகோரியான பெட்ஸியும் அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. காவலர்கள் முன்பு நிர்வாணமாய நடக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர். அடிகளும் உதைகளும், உணவு தராமல் சித்தரவதை செய்யப்பட்டனர். இவற்றை தாங்கமுடியாமல் பெட்ஸி மரித்தார்கள். கோரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தபடியினால், எல்லாவற்றையும் பொறுமையாக சகித்து, நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்கள்.


உலகப் போர் முடிந்து, கோரி விடுதலையாக்கப்பட்டார். அதன்பின் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் சென்று கிறிஸ்துவின் அன்பையும், தான் நாசிக் கேம்பில் பட்ட பாடுகளை விவரித்து, கிறிஸ்துவின் அன்பினால் தான் நிலைநிற்பதாகவும் கூறினார். மியூனிச் என்னுமிடத்தில் நடந்தக் கூட்டத்தில், அவர் இயேசுகிறிஸ்துவின் அனபையும் அவரது மனனிப்பையும், நமது பாவங்களை கடலின் ஆழத்தில் எறிந்து பின் அதை அவர் நிளைப்பதில்லை என்றும், தான் பட்ட கஷ்டங்களையும் மனதுருக கூறிமுடித்து, நாமும் மன்னிக்கிறவாகளாக இருக்க வேண்டும் என்றும், அதுவே சந்தோஷமான வாழ்விற்கு வழி என்றும் கூறி முடித்தார். அதைக் கேட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர். அநேகர் அவரை சூழ்ந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அவர் ஒரு மனிதனின் முகத்தைப் பார்த்தார். அந்த முகம் அவருக்குத் தெரிந்த முகமாயிருந்தது. உடனே ஞாபகம் வந்தது. நாசிக் கேம்பில் தானும் தன் சகோதரியும்பட்ட பாடுகளும், தன் சகோதரியை எவ்வித இரக்கமுமின்றி கொடூரமாகக் கொன்ற கொலைப்பாதகன் இவன்தான் என்ற நினைவுகளும் எழுந்தன. இப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அம்மனிதன், ஷநீங்கள் இன்றுக் கொடுத்த மன்னிப்பின் செய்திக்காக நன்றி. நீங்கள் நாசிக் கேம்பைப் பற்றிச் சொன்னீர்கள். நான் அதில் ஒரு தலைவனாக் இருந்தேன். இப்போதோ நான் ஒரு கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்து என் பாவங்களை மன்னித்து விட்டார். நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?| என்றுக் கேட்டான்.


அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள். ஆயிரமாயிரமான நினைவுகள் அவர்களது உள்ளத்தில் பளிச்சிட்டது. தன் தகப்பன் மற்றும் தன் சகோதரியின் மரணத்திற்கு காரணமான மனிதன், தான் பட்ட எண்ணற்ற இன்னல்களுக்கு காரணமான மனிதன் தன் முன்னே நிற்கிறான், என்கிற வெறுப்பும் அருவெறுப்பும் அவர் மனதில் தோன்றியது.


சற்று நேரத்திற்கு முன்புதான் மன்னிப்பைக் குறித்துக் பேசினார்கள். இப்போது மன்னிக்க முடியாத நிலை. அமைதியாக தேவனிடம் தனக்கு வேண்டிய சத்துவத்தையும் அந்த மனிதனை மன்னிக்கும் மன வலிமையையும் தாரும் என்று ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஜெபிக்கும்போதே ஆவியானவர் அவர்களில் கிரியை செய்ய அரம்பித்தார். அந்த நாசிக் காவலனின் கரங்களைப்பிடித்து, ஷசகோதரனே உங்களை என் முழு இதயத்தோடும் மன்னிக்கிறேன்| என்று கண்கலங்க கூறினார்க்ள. இந்தச் சம்பவத்தைப் படித்த போது என்கண்கள் கலங்கியது. எப்பேற்ப்பட்ட மனிதனையும் மன்னிக்க தேவன் கிருபை மிகுந்தவராயிருக்கிறார். ஆனால் மனிதர்களாகிய நாம் மன்னிக்க மிகுந்த தயக்கம் காட்டுகிறோம.; கோரியைப் போன்று தன்னை இந்த அளவு பாதித்த மனிதனை மன்னிக்க முடியுமென்றால், நாம் மன்னிக்க எந்த மனிதனுடைய தப்பிதங்களும் தடையாக இருக்க முடியாது.


மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் - (மத்தேயு 6:15). நாம் மற்றவர்களின் குற்றங்களை மன்னித்தாலே நமது பாவம் மன்னிக்கப்படும். மற்றவர்களின் குற்றங்களை மன்னிப்போம். இயேசுவின் அன்பு நம்மூலம் வெளிப்படட்டும்.


ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, மற்றவர்களை மன்னிப்பதில் நாங்கள் முந்திக் கொள்ள எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை மன்னிக்க உதவி செய்யும். சத்துருக்களை சிநேகிக்கவும், எங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment