Wednesday, December 30, 2009

அனுதின மன்னா Dec 30

ஊருக்கு புதுசு

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் .- (1கொரிந்தியர் 11:1).

ஒரு புதிய மிஷனெரி வெனிசூலா தேசத்திற்கு ஊழியத்திற்காகச் சென்றார். அவருக்கு அந்த தேசத்தின் மொழி எதுவும் தெரியாது. என்ன செய்வது என்று தெரியாமல் முதலாவது ஆலயத்திற்கு செல்லலாம் என்று எண்ணி, ஆலயத்திறகு சென்றார். ஆனால் வழி தெரியாமல் தடுமாறி, மீண்டும், தேடி கண்டுபிடித்து, சரியாக ஆலயத்திற்கு சென்ற போது, ஆலயம் நிரம்பி இருந்தது. அவருக்கு முதலாம் இருக்கையில் மாத்திரம் ஒரு பெஞ்சில் இடம் இருந்தது. அந்த இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டார். அவர் நினைத்தார், தனக்கு மொழி தெரியாததால், தன் பக்கத்தில் இருப்பவர் எழுந்து நிற்கும்-போது தானும் நிற்கவும், அவர் அமரும்போது தானும் அமரவும் செய்யலாம் என்று அப்படியே செய்ய ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்தவர் எழுந்தபோதெல்லாம் அவரும் எழுந்தார். அவர் அமர்ந்த போது இவரும் அமர்ந்தார். பின் போதகர் எழுந்து பேச ஆரம்பித்தார். அப்போது இவர் நினைத்தார். அவர் அறிக்கை சொல்கிறார்ப் போலும் என்று. அவர் பேசும் போது பக்கதில் இருந்தவர் எழுந்து நின்றார். அதைக்கண்ட மிஷனெரியும் எழுந்து நின்றார். உடனே சபையில் ஒரு சலசலப்பு எழுந்தது. இவர் பின்னால் திரும்பிப் பார்த்தார். யாரும் நிற்கவில்லை. உடனே தான் அமர்ந்துக் கொண்டார்.



பின் சபை முடிந்தவுடன் எல்லாரும் போதகருக்கு கைக் கொடுத்து வெளியே செல்லும்போது இவரும் போதகருக்குக் கை கொடுத்ததார். போதகர் கேட்டார் ஆங்கிலத்தில், என்ன தம்பி நீங்க ஊருக்கு புதுசு போல’ என்று. உடனே ஊழியர் ‘ஆம்! அது அவ்வளவு அப்பட்டமாகத் தெரிகிறதா’ என்றுக் கேட்டார். அதற்கு போதகர், ‘ஆம் தம்பி, நான் இந்த மாதத்தில் பிறந்த புதுக் குழந்தையின் தந்தையை எழுந்து நிற்கச் சொன்னேன், நீங்கள் எழுந்து நின்றீர்கள்!’ என்றாரே பார்க்க வேண்டும்!


நாம் யாரை பின்பற்றுகிறோம் என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். மனிதனை பின்பற்றினால் விழுந்துப் போய்விடுவோம். கிறிஸ்துவே நமக்கு மாதிரி. அவரே நமக்கு மாதிரியை பின் வைத்துப் போனார். ‘ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்’ - (1பேதுரு2:21). அப்போஸ்தனாகிய பவுலைப் போல தைரியமாக நான் கிறிஸ்துவைப்பின்பற்றுவதுப் போல என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லக் கூடுமானால், அவரைப் போல பரிசுத்தமாக,சுவிசேஷத்தினிமித்தம் பாடுகள் பலப் பட்டு, தன் ஜீவனையும் கொடுக்க தயாராயிருந்தால் நாம் பின்பற்றலாம். கர்த்தரே நமக்கு முன்மாதிரி. அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் - (எபிரேயர். 12:2). அவரையே பின்பற்றுவோம். அவருடைய மாதிரியின்படியே செய்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.


கண்களை பதிய வைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன்செல்லுவோம்.




ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்களுக்கு எல்லாவிதத்திலும் முன்மாதிரியாக இருக்கிற
இயேசுகிறிஸ்துவையே நாங்கள் பின்பற்றுகிறவர்களாகி, உமக்கு சாட்சியாக நிற்க உதவி செய்யும். எங்களுக்கு வருகிற நிந்தை அவமானங்களில் எல்லாவித விபரீதங்களையும் சகித்த இயேசுவையே நோக்கிப் பார்க்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment