Saturday, January 2, 2010

அனுதின மன்னா ஜனவரி 03

மேலான அன்பு

நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்;அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை - யோவான் 10:28.

அது ஒரு கோடைக் காலம், இப்போது இங்கிருக்கிற சூட்டைப் போல மிகவும் வெயிலாக இருந்தது. ஒரு சிறுவன் தன் வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு குளத்தில் தண்ணீரில் விளையாடச் சென்றான். போன அவசரத்தில் அவன் தன் சட்டைகளையும் காலணிகளையும் வழியெல்லாம் எறிந்துக் கொண்டே தண்ணீரில் குதித்து, நீந்த ஆரம்பித்தான். அவனுக்கு தெரியாது ஒரு பெரிய முதலை அவன் இருந்த இடத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தது என்று. அதை தூரத்தில் இருந்து கவனித்த அவனது தாயார், அவனை வெளியே வரச் சொல்லி கூச்சலிட்டுக் கொண்டே ஓடினார்கள். அவனும் அந்த சத்தத்தைக் கேட்டு வெளியே வர எத்தனித்தான். அவன் வந்து அவனது தாயாரின் கரங்களை பிடிக்கவும், அந்த முதலை அவனது கால்களை கவ்வவும் சரியாக இருந்தது. இருவருக்கும் இடையே பெரிய இழுபறி நடந்தது.


முதலை மிகுந்த பெலத்துடன் அவனை இழுத்தது. அவனது தாயாரோ தன் மகனை விடாதபடி அவனது கைகளை கெட்டியாகப் பிடித்து இழுத்து, அவனை விடுவிக்க பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழிப் போன ஒரு விவசாயி, இந்தக் கூச்சலைக் கேட்டு வந்து, தன்னிடத்திலிருந்த துப்பாக்கியால் அந்த முதலையை சுட்டு வீழ்த்தினார். அச்சிறுவன் சில காலங்க்ள ஆஸ்பத்திரியில் இருந்து சரியாக்கப்பட்டு வீடு திரும்பினான். அவனது கால்களில் முதலையின் பற்கள் பட்டதினால், கோரமான காயங்கள் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவன் கரங்களிலோ தனது தாயாரின் விரல் நகங்கள் பட்டு அங்கும் காயங்கள். அவன் பெருமையுடன் தன் நண்பனிடம், இது என் தாயார் என்னை காப்பாற்ற முயற்சித்த போது ஏற்பட்ட காய்ங்கள் என்று கூறினான்.


தாயைவிட மேலான அன்பை உடைய இயேசுகிறிஸ்து கூறினார், நம்மை, ஒருவனும் தம்கையிலிருந்து பறித்துக்கொள்வதில்லை - யோவான் 10:28 என்று. சத்துருவானவன் எவனை விழுங்கலாமோவென்று சுற்றித் திரிகிற இக்காலங்களில் நாம் அவருடைய அடைக்கலத்தில் வந்து விட்டால் நம்மை அவருடைய கரத்திலிருந்து யாரும் பறித்துக் கொள்ள முடியாது. நாம் சில நேரங்களில் சத்துரு நமக்கு வைத்திருக்கும் குறியை அல்லது வலையை அறியாதவாறு வலியப் போய் சிக்கிக் கொள்கிறோம். ஆனால் நம் தேவன் ஒரு முறை அவருடைய இரத்தத்தினால் கழுவி விட்டபடியால், நம்மை விட்டுவிடாதபடி தமது காயப்பட்ட கரங்களை நீட்டி நம்மை பரிவாக பற்றி எடுத்து, தம்மோடு சேர்த்தணைத்துக் கொள்கிறார். நமது கரங்களில் அவர் நம்மை இழுத்ததினால் காயங்கள் உண்டென்றால் நாம் அவருக்கு எப்போதும் நன்றியாயிருப்போம்.


வலை தப்பிய பறவைப் போல்

வெளிவந்து பறந்ததென் ஆத்துமா

பாவகட்டுகள் முறிய

நாமும் சுதந்திரம் பெற்றோம்

நம் சகாயம் தேவனின் நாமத்தில்



ஜெபம்: எங்கள் அன்பின் பரம தகப்பனே, எங்களை உம்முடைய கரத்திலிருந்து பறித்துக் கொள்ள யாராலும் முடியாது. உமக்கு விரோதமாக பாவஞ்செய்து உம்மை விட்டுப் பிரிந்து போனாலும் உம்முடைய பிள்ளைகள் எனபதினால் மீண்டும் மீண்டும் எங்களை கழுவி சேர்த்துக் கொள்கிறீரே உமது தயவிற்காக நன்றி தகப்பனே. சத்துருவின் இஷ்டத்திற்கு எங்களை ஒப்புக் கொடாதிருக்கிறவரே உமக்கு எங்கள் நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment