Friday, January 15, 2010

அனுதின மன்னா ஜனவரி 15

முழு பலதோடு தள்ளு

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்,அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். - நீதிமொழிகள் 3:5,6.


ஒரு மனிதன் தன் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று இந்த அறை பிரகாசித்தது. ஆண்டவர் அங்கு தோன்றினார். அவர் சொன்னார், "மகனே நீ எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும், உன் வீட்டிற்கு முன் இருக்கிற அந்த பெரிய பாறாங்கல்லை உன் முழு பெலத்துடன், தள்ளவேண்டும்" என்றார். அந்த மனிதனும் ஒத்துக் கொண்டு, காலையும் மாலையும் தள்ள ஆரம்பித்தான். பகலிலே சூரிய வெயிலிலும், இரவிலே பனியிலும் இருந்து, தொடர்ந்து வருடக்கணக்கில் தள்ளிக்கொண்டே இருந்தான். ஆனால் ஒரு சிறுத் துளியும் அந்த கல் நகரேவேயில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும், ஏமாற்றத்தோடே 'இந்த நாளில் நான் தள்ளியதெல்லம் வீண், ஒரு இன்ச் கூட (Inch) அந்தக் கல் நகரவேயில்லையே என்று மிகவும் ஏமாற்றத்தோடு அவன் படுக்கைக்குச் செல்வான்.


அவன் ஏமாற்றத்தோடு இருப்பதை கவனித்த சாத்தான் அவனை இன்னும் சோர்வடையச் செய்ய வேண்டும் என்று அவனிடம் வந்து, 'நீ இத்தனை நாள் அந்தக் கல்லை தள்ளினாயே ஏதாவது பயனுண்டா?' என்றுக் கேட்டான். அதற்கு அந்த மனிதன், 'ஆம் நான் ஒவ்வொரு நாளும் தள்ளியும் ஒரு பிரயோஜமுமில்லை, அந்தக் கல் கொஞ்சம்கூட நகரவேயில்லை' என்றான். அதற்கு சாத்தான், அப்படியானால் நீ உன்னையே எதற்காக வாட்டிக் கொள்கிறாய்? உன் முழு சக்தியையும் பிரயோகித்து நீ ஏன் தள்ள வேண்டும்? கொஞ்சமாக சக்தியை பிரயோகி, கொஞ்ச நேரம் தள்ளிவிட்டு வந்துவிடு என்று அவனது காதில் ஓதினான். அவன் அதற்கு சம்மதித்து இனிமேல் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எண்ணியபடி, முதலில் ஆண்டவரிடம் ஜெபித்து தன் மனதிலுள்ள கேள்விகளை அவரிடமே கேட்டு விட வேண்டும் என்று எண்ணி ஆண்டவரிடம் ஜெபத்தில், 'நான் அநேக நாட்களாக வருந்தி, நீர் எனக்கு கொடுத்த வேலையை உண்மையாய் செய்து வந்தேன். ஆனால் அதற்கு சிறிதளவுக் கூட பலனில்லையே? ஏன் நான் எதில் தவற விட்டேன் என்று எனக்குச் சொல்லும்' என்று கேட்டான். அதற்கு ஆண்டவர், "மகனே, நான் உன்னிடம் எனக்காக வேலை செய்ய வேண்டும், உன் முழு பெலத்துடன் அந்தக் கல்லை தள்ள வேண்டும் என்று கேட்டபோது நீயும் ஒத்துக் கொண்டு உன் முழு பெலத்தோடு தள்ளினாய், நான் அந்தக் கல்லை நகர்த்த வேண்டும் என்று உன்னிடம் சொல்லவேயில்லையே! உன்னுடைய வேலை தள்ள்வேண்டியது மட்டும்தான். இப்போது நீயாக நீ தவறி விட்டாய் என்று என்னிடம் வந்துச் சொல்கிறாய், உன்னை இப்போது பார்! உன் கைகள் வலிமை மிக்கதாக மாறி விட்டன, உன் கால்கள் உறுதியாய மாறி விட்டன. அந்த பாறாங்கல்லை தள்ளி உன் உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் சக்திவாய்ந்ததாக, நீ முதலில் இருந்தததை விட பலமடங்கு உறுதி வாய்ந்ததாக மாறிவிட்டது. உன்னுடைய அழைப்பு, நீ எனக்கு கீழ்ப்படிந்து, விசுவாசத்தோடே தள்ளவேண்டியது மட்டுமே,. இப்போது நான் அந்தக் கல்லை புரட்டுகிறேன்'' என்று கூறினார்;.


பிரியமானவர்களே, கர்த்தர் எனக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார், நான் இவ்வளவு
பாடுபட்டும், ஒரு பலனையுமே காணவில்லையே என்று வருத்தத்தோடே இருக்கிறீர்களா? இந்த இடத்திலுள்ள ஆத்துமாக்கள் கல்லை போன்றவர்கள், நான் சுவிசேஷத்தை எத்தனையோ நாடகள் சொல்லியும் எந்தப் பிரயோஜனமுமில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? நான் என் குடும்பத்தின் இரட்சிப்பிற்காக எத்தனையோ நாளாக ஜெபித்துக் கொணடிருக்கிறேன், எத்தனையோ நாளாக அந்தக் கல்லை தள்ளிக் கொண்டே இருக்கிறேன் ஒரு பலனையும் காணவில்லையே என்று திகைத்து நிற்கிறீர்களா? என் மகன் அல்லது மகளின் இரட்சிப்பிறகாக எததனையோ நாளாக அந்தக் கல்லை தள்ளிக் கொணடே இருக்கிறேன், இன்னும் புரட்டவே முடியவில்லை என்று சோர்ந்துப் போயிருக்கிறீர்களா? உங்கள் வேலை தள்ளுவது மட்டுமே! தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருங்கள், தொடர்ந்து கர்த்தருக்காக உங்கள் முழு பெலத்துடன் உழைத்துக் கொண்டே இருங்கள். சோர்ந்துப் போகாதிருங்கள், கர்த்தர் அதன் பலனை காணச் செய்வார். உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் - (பிரசங்கி 11:1) என்று பிரசங்கியில் நாம் பார்க்கிறோம். கல்லை தள்ள வேண்டியது மாத்திரமே நம்முடைய வேலை, அதை நகர்;த்த வேண்டியது கர்த்தருடைய வேலை. நாம் நம்முடைய வேலையை ஒழுங்காய் செய்தால் கர்த்தர் தம்முடைய வேலையை சரியான நேரத்தில் செய்வார். சோர்ந்து போகாதிருங்கள். சத்துரு வந்து சொல்லும் காரியங்களுக்கு செவிகொடாதிருங்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது, நிச்சயமாகவே முடிவு உண்டு. அல்லேலூயா! ஆமென்!


ஜெபம்:
எங்கள் அன்பின் பரம தகப்பனே, நீர் செய்ய சொல்லும் காரியங்களை உண்மையோடும் எங்கள் முழு பெலத்தோடும் செய்ய எங்களுக்கு கிருயை தாரும். இடையில் சோர்ந்து போகாமல் காத்துக் கொள்ளும். எங்கள் வேலை கடினமான பகுதியில் இருந்தாலும், கடினமாக பாதையில், கடினமான வேலையாக இருந்தாலும் உமக்கென்று உத்தமமாய் செய்ய எங்களுக்கு கிருபை செய்யும.; நீரே எங்களுக்காக கல்லை புரட்டித் தள்ளுகிறவர் என்று உம்மீது நாங்கள் சார்ந்து ஜீவிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


anudinamanna@gmail.com

No comments:

Post a Comment