Monday, January 11, 2010

அனுதின மன்னா ஜனவரி 11

அவர் காத்திருக்கிறார்

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். - 1 பேதுரு.4:7.


அந்த ஹோட்டலில் இரண்டாவது முறையாக சர்வர் அந்த மனிதரிடம் வந்து ‘ஐயா ஏதாவது வேண்டுமா?’ என்றுக் கேட்டான். அவர் வந்து அரை மணி நேரம் ஆகிறது. அவரோ, ‘இல்லை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கிறேன். அவள் வந்து விடுவாள்’ என்றார்.


அந்த மனிதர் பார்க்க அழகாக நல்ல உடை உடுத்தி இருந்தார். யாரையும் ஈர்த்திழுக்கும் தோற்றம். அவளுக்காக அவர் காத்திருந்தார்; தனிமையாக அமர்ந்திருந்து பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னும் அரை மணிநேரம் கழித்து, சர்வர் திரும்பவும் வந்து, ‘ஐயா காப்பியாவது கொண்டு வரட்டுமா?’ என்றுக் கேட்டான். அவரும் ‘சரி’ என்றார். அவன் காபி கொண்டுவந்து கொடுத்து விட்டு, ‘ஐயா உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் ஒன்று கேட்கட்டுமா?’ என்றுக் கேட்டான். அதற்கு அவர் கேள் என்றார். ‘ஐயா நீங்கள் இன்று 3 ஆவது நாளாக அந்தப் பெண்ணிற்காக காத்திருக்கிறீர்கள். அவளோ வரவேயில்லையே, ஏன் அவளுக்காக காத்திருக்க வேண்டும்? நீங்கள் மற்ற வேலைகளை கவனிக்கலாமே’ என்றான். அதற்கு அவர்‘அவள் சொன்னாள் நான் வருவேன் என்று, அதோடு அவளுக்கு நான் தேவை’ என்றார். ‘ஐயா அவளுக்கு நீங்கள் தேவை என்றால் இன்று மூன்றாவது நாளாக உங்களை காக்க வைக்கமாட்டாளே’ என்றான். ‘அவள் சொன்னாள், தான் இன்று வருவதாக நான் அவளை அதிகமாய் நேசிப்பதால் அவளுக்காக காத்திருக்கிறேன்’ என்றார். அந்த சர்வர், இந்த மனிதனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்திருக்குமா? என்று யோசித்துப் பார்த்து, இல்லை ஆளைப் பார்த்தால் நன்றாக இருக்கிறார், என்னவோ நமக்கு என்ன என்று போய் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. அவளோ வரவேயில்லை. அவளது சத்தத்தைக் கேட்க வேண்டும், அவளோடு எத்தனையோ காரியங்களை பகிர்ந்துக கொள்ள வேண்டும் என்று அவர் பொறுமையோடு காததிருந்தார். ஹோட்டலை மூடும் நேரம் வந்தபோது அந்த சர்வர் மீண்டும் வந்து, ‘ஐயா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? என்றுக் கேட்டான்.’ அதற்கு அவர், ‘இன்று அவ்வளவுதான், நான் புறப்படுகிறேன்’ என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு, கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு, புறப்படும்போது அங்கு இருந்த கிளர்க்கிடம், நாளை சரியாக 6 மணிக்கு இரண்டு பேருக்கு டேபிளை புக் பண்ணி விடுங்கள் என்றுச் சொல்லி விட்டு தனது ஏமாற்றத்தை மறைக்க மெல்லியதாக புன்னகைத்து விட்டுச் சென்றார்.


அவர் வெளியே போகும்போது யாருக்காக அவர் அத்தனை நேரம் காத்திருந்தாரோ, அவள் தனது படுக்கைக்கு சென்றாள். அன்று சாயங்காலம் முழுவதும் தன் தோழிகளோடு வெளியே சென்றிருந்ததால் அவளுக்கு ஒரே களைப்பு. அடுத்த நாள் அலாரம் வைக்க தனது கடிகாரத்தை பார்த்தபோது அதன் கீழ் ஒரு தாளில் இன்று ஆறு மணிக்கு ஜெபிக்க வருவதாக எழுதி வைத்திருந்தாள். ஐயோ மறந்துப் போய்விட்டோமே! என்ற ஒரு சிறிய வருத்தம் மனதில் தோன்றியது. அதை புறம்பே தள்ளிவிட்டு நாளை பார்த்துக் கொள்ளலாம், இயேசுகிறிஸ்து மன்னித்து விடுவார் என்று எண்ணியபடி படுக்கச் சென்று விட்டாள்.


இன்று நம்மில் அநேகர் ‘அப்பா எனக்கு இதைச் செயயும், நான் தினமும் ஜெபிப்பேன்’ என்று வாக்கு பண்ணுகிறோம் ஆனால் காரியம் நடந்த பிறகு அதை மறந்துப் போகிறோம். கர்த்தர் மன்னித்து விடுவார் என்கிற குருட்டு நம்பிக்கை. ஆனால் அவர் காத்திருக்கிறார் என்பதை மறந்து போய் விடுகிறோம். இன்று எத்தனை குடும்பங்களில் குடும்ப ஜெபம் வைப்பதில்லை. தேவனிடம் நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு குடும்பமாக ஒரு நன்றி தெரிவிக்கக்கூட நாம் ஜெபிப்பதில்லை.குடும்ப ஜெபம் இல்லாத வீடு, கூரை இல்லாத வீடு என்று என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள். கூரை இல்லாத வீடு எல்லா மழைக்கும் காற்றுக்கும் தூசிக்கும் திறந்திருக்கிற மாதிரி எல்லா கஷ்டங்களுக்கும் பிசாசின் கிரியைகளுக்கும் திறந்துக் கொடுக்கிற மாதிரியாகும். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்;அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று என்று கர்த்தரிடம் முறையிட்டான். அப்படியானால் நம் குடும்பத்தைச் சுற்றி நம் ஜெபத்தினால் வேலி அடைக்கிறோம். அது எத்தனை பாதுகாப்பு! தனி ஜெபத்தினால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஜெயம் உண்டாகும். நாம் தசமபாகம் கொடுக்கும்போது நேரத்திலும் தசமபாகம் கொடுக்கப்பட வேண்டும் அப்படியானால் ஒரு நாளில் 2 மணி 40 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும், நாமோ ஐந்து நிமிடங்கள் வேகமாக ஜெபித்து விட்டு போகிறோம். ஜெபத்திறகு நேரத்தை ஒதுக்குவோம். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம். ஆமென்.


ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா

ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்



ஜெபம்:
எங்களை நேசிக்கிற நல்ல பிதாவே, ஜெபிக்கிற வாஞ்சையை தாரும் ஐயா. ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேனமையை காணச் செய்யும். சோர்ந்து போகாமல் ஜெபிக்க கிருபைச் செய்யும். ஜெபத்தினால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள உதவிச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

No comments:

Post a Comment