Saturday, January 23, 2010

அனுதின மன்னா ஜனவரி 23

கர்த்தரின் காப்பி(Coffee)

இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து,
சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. - பிரசங்கி - 5:18.



ஒரு முறை ஒரு சில மாணவர்கள் தங்கள் வயதான முன்னாள் கல்லூரி பேராசிரியரைக் காண வந்திருந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது தங்களது வேலை பளுவைக் குறித்தும் தங்களது வாழ்க்கையைக் குறித்தும் ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது பேராசிரியர் அவர்களுக்கு காப்பி கொண்டு வருவதற்காக உள்ளேச் சென்றார்.


அவர் ஒரு பெரிய பாத்திரத்தில் காப்பியையும், விதவிதமான காப்பி கோப்பைகளையும் (Coffee Cups) கொண்டு வந்தார். அந்த கோப்பைகள் சில கண்ணாடியினாலிருந்தது, சில பிளாஸ்டிக்காக இருந்தது. சில சீனா களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது. சில விலை உயர்ந்ததாகவும், சில அழகிய கைவேலை செய்யப்பட்டதாகவும் சில சாதாரணமாகவும் இருந்தது. அவர் சொன்னார், 'நீங்களே உங்கள் கோப்பைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்' என்றார். அவரவர் ஒவ்வொரு கோப்பையை எடுத்து அதில் காப்பியை ஊற்றி குடிக்க ஆரம்பித்தனர்.


அப்போது அந்த பேராசிரியர், ' நீங்கள் பார்த்திருந்தீர்களானால், அதிக விலையான கோப்பைகளும், சிறந்த கோப்பைகளும் முதலில் எடுக்கப்பட்டு, சாதாரண மற்றும் தரம் குறைந்த கோப்பைகள்; விடப்பட்டிருக்கின்றன. சாதாரணமாக எல்லாரும், தங்களுக்கென்று வரும்போது சிறந்ததையே தெரிந்துக் கொளவார்கள், என்றாலும் அதுவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் படும் பாடுகளுக்கு காரணம் என்று பீடிகையோடு பேச ஆரம்பித்தார்.


அந்த கோப்பைத் தன்னில் தானே அதில் உள்ள காப்பிக்கு சுவை சேர்ப்பதில்லை. உங்கள்
அனைவருக்கும் காப்பிதான் தேவையே தவிர கோப்பைகள் இல்லை. ஆனாலும் நீஙகள் தெரிந்தெடுத்தது சிறந்த கோப்பைகளை. மட்டுமல்ல, நீங்கள் மற்றவர்களுடைய கோப்பைகளையும் பார்க்கத் தொடங்கினீர்கள்..


இப்போது இப்படி சிந்தித்துப் பாருங்கள், காப்பிதான் நமது வாழ்க்கை, கோப்பைகள்தான், நமது பணம் பட்டம், பதவி, வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி அந்த கோப்பைகள் காப்பியின் தரத்தையோ, ருசியையோ மாற்ற முடியாதோ, அதைப் போல உங்கள் பணமோ, பட்டமோ, வேலையோ உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தையோ இன்ப துன்பங்களையோ நிர்ணயிக்க நாம் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது. சில நேரங்களில் நமது கவனம் முழுவதும் எப்படி சம்பாதிக்க வேண்டும், எப்படி வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அதிலேயே இருப்பதால் கர்த்தர் நமக்கு கிருபையாக கொடுத்த ஆயுசின் நாட்களை சந்தோஷமாக ருசி பார்ப்பதில்லை' என்றார்.


தேவன் நமது வாழ்க்கையை உருவாக்குகிறாரே தவிர கோப்பைகளை அல்ல. அவருடைய சித்தத்தின்படி நமக்கு வேலையும் ஐசுவரியமும் கிடைத்தாலும் அதிலேயே நம் கவனத்தை செலுத்தி, நமது உடல் நிலையை கெடுத்துக் கொள்வதற்கல்ல. அநேகர் தங்களுடைய வாலிப வயதில் உழைத்து, சரியாக சாப்பிடாமல், சரியான உடைகளை உடுத்தாமல், ஓவர் டைம் என்று அப்படியும் சம்பாதித்து, கேட்டால் என் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கிறேன் என்றுச் சொல்லி, மாடாக உழைத்து தேய்ந்துப் போவார்கள். கடைசியில் வயதான காலத்தில் பார்த்தால், இல்லாத வியாதிகள் ஒவ்வொன்றும் அவர்களை தாக்கி, கடைசியில் வைத்தியர்களுக்கு தஙகள் பணத்தை கொண்டுப் போய் கொட்டுவார்கள். மட்டுமல்ல, பின்னர் வாழ்க்கையே கஷ்டம்தாங்க, ஒரு சுகமும் இல்லை என்று வேதாந்தம் பேசுவார்கள்.

நாம் உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு என்று பார்த்தோம். அதற்காக தீய வழிகளிலும், உடல்நலத்தை கெடுக்கிற காரியங்களிலும் உலகத்தை அனுபவிப்பதைச் சொல்லவில்லை. அவைகள் தேவனுக்கு அருவருப்பான காரியங்கள். கஷ்டப்பட்ட சம்பாதிப்பதை குடும்பமாக நேராநேரம் சாப்பிட்டு, சரியான உடைகளை உடுத்தி, சந்தோஷமாக இருப்பதையே கர்த்தர் விரும்புகிறார். ஆகவே உங்கள் காப்பிகளை சந்தோஷமாய் சாப்பிடுங்கள்.‘சந்தோஷமான மக்களுக்கு எல்லாம் சிறந்ததாக
அமைவதில்லை, ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் சிறந்ததாக அமைத்துக் கொள்கிறார்கள்’.


சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க

உயர்வானாலும் தாழ்வானாலும்

சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்



ஜெபம்:
சர்வத்தையும் படைத்த எங்கள் சர்வ வல்லமையுள்ள தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்துள்ள வாழ்க்கையில் நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதையே நீர் விரும்புகிறீர். அப்படி நாங்கள் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். உமக்கு பிரியமில்லாத வழிகளில் சென்று விடாமல், நீர் கொடுத்த ஐசுவரியத்தையும், வேலையையும் நாங்கள் அனுபவிக்க உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment