Thursday, January 21, 2010

அனுதின மன்னா ஜனவரி 21

கர்த்தருடைய நீதி

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது. - ஏசாயா 64:6.


ஒரு ஓவியர் 'கெட்டகுமாரன்' என்ற தலைப்பில் ஓவியம் வரைவதற்காக அதற்கேற்ற மாடல் வேண்டும் என்று நியூயார்க் நகரத்தின் தெருக்களில் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பிச்சைக்காரன் ஒரு பார்க்கில் (Park) ஒரு பெஞ்சின் மீது படுத்துக் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே இந்த பிச்சைகாரன்தான் தனது ஓவியத்திற்கு சரியான மாடல் என்று தீர்மானித்து, அந்த பிச்சைக்காரனை தட்டி எழுப்பி, நான் ஒரு ஓவியம் வரைய இருக்கிறேன். அதற்கு நீதான் சரியான மாடல், ஆகவே நாளை இந்த நேரம் என்வீட்டுக்கு வா என்று கூறி வீட்டு விலாசத்தையும் கொடுத்து, உனக்குச் சரியான சன்மானம் கொடுப்பேன் என்று கூறினார். அதற்கு அந்த பிச்சைக்காரனும் ஒத்துக் கொண்டான்.


அடுத்த நாள் அவர் சொன்ன அதே நேரத்தில் கதவு தட்டப்பட்டது. ஒரு வாலிபன் முகத்தில் சவரம் செய்துக் கொண்டு, நல்ல உடை அணிந்து, வந்திருந்தான். அதைக் கண்ட அந்த ஓவியர், 'நீங்கள் தவறான விலாசத்துக்கு வந்திருக்கிறீர்கள். நான் உங்களை வரச் சொல்லவில்லை, நான் ஒரு பிச்சைக்காரனைத்தான் வரச் சொல்லியிருந்தேன்' என்றுக்கூறினார். அதற்கு அந்த வாலிபன் 'ஐயா நான் தான் அந்த பிச்சைக்காரன். நீங்கள் சொன்னவுடன் நான் என் கையில் இருநத பணத்தை வைத்து உடை வாங்கி அணிந்து வந்தேன்' என்றான். அதற்கு அந்த ஓவியர் ' நீ என்னுடைய
ஓவியத்திறகு இப்போது சரியான மாடல் இல்லை ' என்று கூறி அவனை அனுப்பிவிட்டார்.


அந்த பிச்சைக்காரன் தன்னை ஒரு சிறந்தவனாக அந்த ஓவியத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்திருந்தான். ஆனால் ஓவியரோ அவனை அவனாகவே வரைய விரும்பினார். அப்படித்தான் நாம் கர்த்தரிடம் வரும்போது நம்முடைய சுயநீதியில் நம் பெருமையில், வரக்கூடாது. நம்முடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தை என்று தேவன் அறிவார். அவரிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. நாம் இருக்கிற வண்ணமாகவே அவரிடம் வரும்போது அவர் தம்முடைய நீதியினால் நம்மை நீதிகரிப்பார்.


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று, தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர்,
விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்;

ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் லூக்கா 18:10-14 என்று இயேசு கிறிஸ்துக் கூறினார். ஆயக்காரனைப் போல நமது நீதி ஒன்றுமில்லை என்றும், என் மேல் கிருபையாயிரும் என்றும் ஜெபித்தால் அவர் கிருபையாக நம்மை மன்னித்து அவரது நீதியையே நமக்குக் கொடுப்பார். அவரது சமுகத்தில் நம்மை எவ்வளவு தாழ்த்துகிறோமோ அவ்வளவு கிருபைகளை அவர் நமக்குத் தருவார்.



தாங்கி நடத்தும் கிருபை இது

தாழ்வில் நினைத்த கிருபை இது

தந்தையும் தாயும் கைவிட்டாலும்

தயவாய் காக்கும் கிருபை இது



ஜெபம்:
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தை என்பதை நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் இருக்கிற வண்ணமாகவே உம்மிடத்தில் வருகிறோம் தகப்பனே. எங்களை ஏற்றுக் கொண்டு உம்முடைய கிருபையினால் வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.





கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

No comments:

Post a Comment