Sunday, January 17, 2010

அனுதின மன்னா ஜனவரி 17

நீதிமானின் சந்ததி

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.- நீதிமொழிகள். 22:6.


பிரசித்திப் பெற்ற ஊழியக்காரனான ஆஸ்வால்ட் ஸான்டர்ஸ் (J.Oswald Sanders) தாம் எழுதிய A spiritual Clinicஎன்னும் தமது புத்தகத்தில் நியூயார்க் நகரத்தில் இருந்த இரண்டு குடும்பங்களின் தலைமுறைகளின் வரலாற்றை ஒப்பிட்டு பார்த்து, அவர் ஒரு விசேஷித்த காரியத்தை கீழ்கண்டவாறு கண்டறிந்தார்.


முதலாவது குடும்பம் மேக்ஸ் ஜூக்ஸ் (Max Jukes).அவர் கடவுள் பக்தியில்லாதவராக, துன்மார்க்க ஜீவியம் செய்தவராக இருந்தார். அவர் மணந்த பெண்ணும் ஒரு கொள்கையில்லாதவளாய் கடவுள் பயம் இல்லாதவளாக இருந்தாள். அவர்களுடைய தலைமுறைகளில் வந்தவர்களில் 1200 பேரை வைத்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் 310 பேர் மிகவும் ஏழ்மையான நிலையில் ஒரு வீடும் வேலையும் இல்லாமல் கஷ்டமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 440 பேர் தங்களது ஒழுக்கமில்லாத வாழ்க்கையினால் தங்கள் சரீரங்களில் வியாதிகளை வரவழைத்துக் கொண்டார்கள். ஒருவருக்கு 13 வருடம் வீதம் 130 பேர் தங்களது துஷ்ட நடவடிக்கைளினால் சிறைக்கு அனுப்பபட்டார்கள். 100 பேர் குடியர்களாகவும், 60 பேர் திருடர்களாகவும், 190 பேர் விபச்சாரிகளாகவும் இருந்தனர். இவர்களது இந்த நிலையினால் அரசாங்கத்துக்கு 1,500,000 டாலர்கள் வீண் செலவு விரயமானது.


அடுத்த குடும்பம் ஜோனத்தான் எட்வர்ட் (Jonathan Edward) குடும்பம். அவர் தேவனுடைய
மனிதனாக கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தவர். அவர் மணந்த பெண்ணும் கர்த்தருக்கு பயந்தவர்கள், ஊழிய அழைப்பு பெற்றவர்கள். அவர் குடும்பத்தில் வந்த தலைமுறையில் 300 பேர் போதகர்களாகவும், மிஷனெரிகளாகவும், வேதாகம கல்லூரியில் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். 100 பேர் பேராசியர்களாகவும், 100 பேர் சிறந்த வக்கீல்களாகவும், 30 பேர் நீதிபதிகளாகவும், 60 பேர் வைத்தியர்களாகவும், 14 பேர் கல்லூரிகளில் துணை முதல்வர்களாகவும் ஒருவர் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதியாகவும் இருந்தனர். அநேகர் அவரது குடுமபத்திலிருந்து நல்ல செல்வாக்கு மிக்கவர்களாகவும், நாட்டில் உயர்ந்த நிலைகளில் இருந்ததாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்களது குடும்பத்தினால் அரசாங்கத்திறகு மிகுந்த வரவு வந்ததென்று குறிப்புகள் கூறுகின்றன.


நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள் (நீதிமொழிகள் 20:7). நீங்கள் நீதிமானாயிருந்தால் உங்களுக்கு பின்வரும் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கும். இது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்துள்ளது. நீங்கள் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால் 128 ஆம் சங்கீதத்தில் கூறப்பட்டுள்ள அத்தனை ஆசீர்வாதங்களும் உங்களையும் உங்கள் சந்ததியையும் சாரும் . துன்மார்க்கனுடைய சந்ததி துனமார்க்கமாக இருக்கும் என்பதற்கு மேலே கூறப்பட்ட உதாரணமே சாட்சி. நம்முடைய வாழ்வும், நாம் பின்வைத்து போகும் நமது அடிச்சுவடிகளும் நம்முடைய சந்ததிக்கு ஆசீர்வாதமா அல்லது சாபமா என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கையே உறுதிப்படுத்தும். ஆகவே கர்த்தருக்கென்று வாழ்வோம், விசுவாசமுள்ள சந்ததியை இந்த உலகததிற்கு கொடுப்போம். நாமும் நம் குடும்பமும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.


நானும் என் வீட்டாருமோவென்றால்

கர்த்தரையே சேவிப்போம்

நீயும் சேவிப்பாயா? நீயும் சேவிப்பாயா?



ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல பிதாவே, எங்களது வருங்கால சந்ததி கர்த்தருக்கு பிரயோஜனமாகவும், உலகிற்கு ஆசீர்வாதமாகவும், சபைக்கும் சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கும்படியாக எங்களது வாழ்க்கை நல்ல ஒரு உதாரணமாக இருக்க கிருபைச் செய்யும். எங்களது சந்ததியில் யாரும் கெட்டவர்களாகவோ தீமை செய்கிறவர்களாகவோ இல்லாதபடி நீர் விரும்பும் குடும்பங்களாக எங்கள் குடும்பங்களை மாற்றும். எங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் வளர்க்க பெற்றோராகிய எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

No comments:

Post a Comment