Friday, January 22, 2010

அனுதின மன்னா ஜனவரி 22

ஜெயமுள்ள வாழ்க்கை

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, வேண்டிக்கொள்ளுகிறேன். - (எபேசியர் 3:17-19).


ஒரு முறை பிரசங்கியார் உ.க.ஙர்ர்க்ஹ் அவர்கள் தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் காட்டி, அதனில் உள்ள காற்றை எப்படி எடுப்பது என்றுக் கேட்டார். ஓவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறினார்கள். “ஒருவர் சொன்னார், ஒரு குழாயை வைத்து அதை உறிஞ்சி எடுத்துவிடுங்கள்” என்றுக் கூறினார். அப்படி எடுத்தால் அங்கு வெற்றிடம் உருவாகும். அதினால் கண்ணாடி உடைந்து விடும் என்று மூடி கூறினார். இன்னும் அநேகர் வெவ்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது அவர் ஒரு பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து அந்த டம்ளரில் நிறைய ஊற்றி, “இப்போது இதில் கொஞ்சம்கூட காற்று இல்லை. தண்ணீரை ஊற்றியவுடன் காற்று எடுக்கப்பட்டு விட்டது” என்றார்.


அவர் இந்த சிறிய உதாரணத்தின் மூலம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்றுக் காட்டினார். பாவத்தை அங்கும் இங்கும் உறிஞ்சி எடுப்பதால் அது போய் விடாது என்றும், நாம் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயம் நிரப்பப்பட வேண்டும் என்றும் விளக்கினார். பின்னும் அவர், ‘நம்முடைய இருதயத்திலிருந்து பெருமையும் சுயநலமும் மற்றும் பாவமான காரியங்களும்; விலகும்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு இருதயத்தையும் நிரப்புவார்’, ஆனால் நம் இருதயம் அப்பாவங்களினால் நிறைந்திருந்தால் பரிசுத்த ஆவியானவருக்கு அங்கு இடமில்லை என்றுக் கூறினார். நம்முடைய இருதயம் உலக காரியங்களுக்கு வெறுமையாக்கப்படாலொழிய ஆவியானவர் அதை நிரப்ப முடியாது என்றும் கூறினார்.


அதுப் போல நாம் நம்மையே வெறுமையாக்கி ஆவியானவரை நம் இருதயத்திற்குள் அழைப்போம். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். அவர் வந்து நம் இருதயத்திற்குள் வாழும் போது எந்த பாவமும் நம்மை நெருங்காது. கர்த்தர் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். மட்டுமல்ல சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார். - யோவான் - 14:8:13.


ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் வாழும்போது அவர் நம்முடைய வாழ்வை பொறுப்பெடுத்துக் கொள்வார். சிலர் பரிசுத்த ஆவியை அளவில்லாமல் நான் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு பிரசங்கிமாரிடம் போய் நிற்கிறார்கள். நீங்கள் உங்களை எவ்வளவு வெறுமையாக்குகிறீர்களோ அந்த அளவு அவர் உங்களை நிரப்புவார். எந்த பிரசங்கிமாரும் கடவுள் அல்ல உங்களுக்கு பரிசுத்த ஆவியை அதிகமாய் கொடுப்பதற்கும், மற்றவர்களுக்கு குறைவாக கொடுப்பதற்கும்.
முதலாவது நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது பரிசுத்த ஆவி அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவர்.அவர் திரியேக தெய்வத்தின் ஒரு தன்மையானவர். அவர் பாவிகளான நம்முடைய இருதயத்தில் வாசம் செய்வது அவருடைய சுத்த கிருபையாகும்.


நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பது மிகவும் அவசியம். அவர் நமக்குள் இருந்தால் தான் நாம் ஆவியின் கனியை வெளிப்படுத்த முடியும். நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இல்லாவிட்டால், நாம் பாவத்திற்குள் திரும்ப விழ வேண்டிய நிலைமை ஏற்படலாம். "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதுவரை கோழையாக இருந்த பேதுரு பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்ட பிறகு வல்லமையான பிரசங்கியாக மாறினார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட அநேகர் கர்த்தருக்கென்று வல்லமையாக உபயோகிக்கப்படுவதை காண்கிறோம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வோம். நமது வாழ்க்கை நிச்சயமாகவே மாறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சாத்தானை எதிர்த்து நிற்க வல்லமை தருவார். அவர் வாழும் ஆலயமாக நம் இருதயம மாறட்டும். அல்லேலூயா!


ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே

துதிக்கத் தூண்டும் துணையாளரே

சாத்தானின் சகல தந்திரங்களை

சாகடிக்க வாருமையா



ஜெபம்:
எங்களை நேசிக்கும் எங்கள் பரம தகப்பனே, பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் வாஞ்சையைத் தாரும் ஐயா. அவரைப் பெற்றுக் கொண்டு, சாத்தானுக்கு எதிர்த்து நிற்கவும், பாவத்திலிருந்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழவும் எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

No comments:

Post a Comment