Thursday, January 14, 2010

அனுதின மன்னா ஜனவரி 14

வெற்றியின் நாள்

மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். - நீதிமொழிகள். 11:12.



ஒரு நாள் நான் வெளியே போவதற்காக ஒரு வாடகை டாக்ஸியில் ஏறி அமர்ந்தேன். நாங்கள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருந்தோம். இடையில் ஒரு கறுப்புநிற கார், திடீரென்று எங்களை நோக்கி வேகமாக வந்தது. எங்கள் டிரைவர் லாவகமாக ஓட்டி, ஒரு சிறு இடைவெளியில் விபத்திலிருந்து தப்ப வைத்தார். மற்ற காரிலிருந்த மனிதனோ எங்கள் டிரைவரை நோக்கி சத்தமிட ஆரம்பித்தான்.

எனக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஆனால், எங்கள் டிரைவரோ,புன்னகைத்து விட்டு, கைகளை காட்டிவிட்டு தன்னுடைய பாதையை தொடர்ந்தார். நான் டிரைவரிடம் கேட்டேன், 'ஏன் அந்த ஆளை சும்மா விட்டீர்கள்?' அந்த ஆள்தானே தவறாக வந்தது? நீங்கள ஏன் சத்தம் போடாமல் விட்டீர்கள்? என்று சரமாரியாக கேள்விகள் கேட்டேன். அதற்கு அந்த டிரைவர் சொன்னார், 'அநேக மக்கள் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளைப் போன்றவர்கள். அவர்கள் இருதயம் முழுவதும் நிறைய ஏமாற்றங்கள், நிறைய கோபங்கள், நிறைய விரக்திகள். குப்பை வண்டி ஓரிடத்தில்; அந்த குப்பைகளைக் கொட்டுவதுப் போல் இவர்கள் இந்த குப்பைகளை தங்கள் இருதயத்தில் சுமந்துக கொண்டு யாரிடம் கொட்டுவது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலநேரம் உங்கள் மீது கொட்டுகிறார்கள். அதை எல்லாம் மனதில் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அந்த குப்பைகளை எடுத்து அதை உங்கள் வீடு உங்கள் ஆபீஸ் போன்ற இடங்களுக்குச் சென்று பரப்பக் கூடாது அந்த குப்பைகளை அந்த நேரமே மறந்து விடுவது நல்லது' என்றுக் கூறினார். (அவர் ஒரு கிறிஸ்தவர்) ஆம் அவர் சொன்னது எத்தனை உண்மை! எத்தனை முறை தேவையில்லாமல் நாம் வேலை செய்யும் இடங்களில், நாம் செல்லும் இடங்களில் தேவையற்ற வார்த்தைகளை கேட்டிருக்கிறோம்! எத்தனை முறை அவைகளைக் கேட்டு சோர்ந்துப் போயிருக்கிறோம். நான் ஒருதப்புமே பண்ணலை, ஆனால் என்னை இப்படி சொல்லி விட்டார்களே என்று இரவெல்லாம் தூங்காமல் அதையே யோசித்துக் கொண்டிருக்கிறோம்! அந்த டிரைவர் சொன்னதைப் போல அவர்கள் எல்லாம் குப்பை லாரிகள்! தங்களது குப்பையை யார் மேலோ கொட்ட வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கும்போது நாம் மாட்டியிருப்போம்.

கவலையை விடுங்கள். இது உங்களுக்கு மட்டும் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமல்ல! மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான் என்று வேதம் சொல்கிறது. உங்களது அழகான புதிய நாளை இவைகள் வீணாக்க விடாதீர்கள். யாராவது சத்தமிட்டால், ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டு (மிகவும் கஷ்டம்தான்!)

அப்படியே விட்டுவிடுங்கள். அதையே நினைத்து குமுறிக் கொண்டிருக்காதீர்க்ள்! அவருக்காக ஜெபியுங்கள். உஙகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் சண்டை போட்டு நாளை வீணாக்காமல், அவர்ளை நேசியுங்கள்! கர்த்தர் கொடுத்த அருமையான நாளை ஆனந்தமாய் அனுபவியுங்கள்.



ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்

அல்லேலூயா பாடுவோம்!



ஜெபம்:

எல்லா நன்மையான ஊற்றுக்கும் காரணமான எங்கள் நல்ல பிதாவே, இந்த அருமையான காலை வேளைக்காக உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த இந்நாளை வீணாக கோபத்திலும் விரக்தியிலும் செலவழிக்காமல், எஙகளை தூஷிக்கிறவர்களை நாங்கள் நேசிக்க உதவிசெய்யும். இந்த நாளை சந்தோஷமாக கழிக்க உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

No comments:

Post a Comment